4 மாவட்டபெண்போலீஸ்-உயர் அதிகாரிகளுக்குதுப்பாக்கி சுடும் போட்டி
வல்லநாட்டில் 4 மாவட்ட பெண்போலீஸ்-உயர் அதிகாரிகளுக்குதுப்பாக்கி சுடும் போட்டி நடந்தது.
வல்லநாட்டில் 4 மாவட்ட பெண் போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில் 2 பிரிவுகளில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் முதலிடம் பிடித்தார்.
துப்பாக்கி சுடும் போட்டி
தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பொன்விழா கொண்டாடும் வகையில் நெல்லை சரகத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
போட்டிகளுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாநகரம், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை 9, 11, 12-வது பட்டாலியன் ஆகியவற்றில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செலின்பிரபா-ரமாலட்சுமி முதலிடம்
பெண் போலீசாருக்கான இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் முதல் நிலை பெண் காவலர் செலின் பிரபா முதலிடத்தையும், நெல்லை மாவட்ட ஆயுதப்படை போலீஸ் ஆதிலட்சுமி 2-வது இடத்தையும், கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜென்சி மூன்றாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
கார்பைன் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் ராமலட்சுமி முதல் இடத்தையும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் ஜானகி ஆகியோர் 2-வது இடத்தையும், நெல்லை பெருமாள்புரம் போலீஸ் ஏட்டு கற்பக ராஜலட்சுமி 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் பூபதி முதலிடத்தையும், நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு வளர்மதி 2-வது இடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருகிருத்திகா 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
உயர் அதிகாரிகள்
போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் போட்டி நேற்று நடந்தது. இதில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்ரமன்யா ஆகியோர் முதல் இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை 12-வது பட்டாலியன் உதவி கமாண்டன்ட் பூபதி 2-வது இடத்தையும், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் முதல் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்ட பயிற்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்ரமன்யா 2-வது இடத்தையும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது பிரிவு பட்டாலியன் உதவி கமாண்டண்ட் பூபதி 3-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சென்னை கமாண்டோ பயிற்சி பள்ளி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேக் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோகுலகுமார், பாஸ்கர், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனைமுருகன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.