கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 4 போலி டாக்டர்கள் கைது


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 4 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

போலி டாக்டர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில், மருத்துவம் படிக்காமல், போலி டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, ஓசூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, வருவாய்த்துறையினர் மற்றும் மத்திகிரி போலீசார், ஓசூர் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

குறிப்பாக ஓசூர் அருகே பேளகொண்டபள்ளியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஷானிமா (வயது 24) என்ற பெண் போலி டாக்டர் மற்றும் சவுகத் அலி (46) ஆகியோரது மருந்தகங்களில் நேற்று மருத்துவக்குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், ஷானிமா கஜகஸ்தானில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் கடந்த ஒரு ஆண்டாக பேளகொண்ட பள்ளியில் போலி டாக்டராக சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதேபோல், ஓசூர் ெரயில்வே நிலைய பகுதியை சேர்ந்த சவுகத் அலி, மருந்தாளுனர் படிப்பு படித்து விட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது.

3 பேர் கைது

இதேபோல் ஓசூர் அருகே கொத்தகொண்டபள்ளியில், சீனிவாஸ் (33) என்பவர் பி.இ.எம்.எஸ். படித்து விட்டு மருந்தகமும், உள்ளே 3 படுக்கை கொண்ட கிளினிக்கையும் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததையும் மருத்துவக்குழுவினர் மற்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களின் மருந்தகத்தில் இருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மருந்தகங்களும் சீல் வைக்கப்பட்டன.

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமோட்டூர் அருகே உள்ள கோவிந்தன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ் (48). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் குருபரப்பள்ளி அருகே ராமாபுரம் சந்தைகேட் பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார்.

இவர் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ேநாயாளிகளுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது. இதையடுத்து வேப்பனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் குப்புராஜ் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. இது குறித்து டாக்டர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புராஜை கைது செய்தனர்.

4 பேர் கைது

நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண் உள்பட 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களில் மட்டும் பர்கூர், கந்திகுப்பம், பேரிகை பகுதிகளில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்பசந்திரம் கிராமத்தில் லட்சுமி மெடிக்கல் மற்றும் கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் படிக்காமல் விஜய் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் அன்பரசு மற்றும் தர்மபுரி சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சந்திரா மேரி தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கிளினிக்கில் சோதனை செய்தனர்.

அப்போது போலி டாக்டர் விஜய் அங்கிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது கிளினிக்கிற்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். அதேபோல் அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட நாட்றாம்பாளையத்தில் போலி டாக்டர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அங்கிருந்த போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story