வாழப்பாடியில் எலி மருந்தை சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலை முயற்சி- பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு


வாழப்பாடியில் எலி மருந்தை சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலை முயற்சி- பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
x

வாழப்பாடியில் பெற்றோர் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்

வாழப்பாடி:

மாணவிகள் விடுதி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த புஷ்பா, ரமணியம்மாள், ஜோதிகா மற்றும் இந்நாடு கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா ஆகியோர் தங்கி, வாழப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த 19-ந் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதி நிர்வாகியிடம் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளனர். ஆனால் 4 மாணவிகளும் அவரவர் வீட்டுக்கு செல்லாமல், அவர்களுடன் விடுதியில் தங்கி பயிலும் கொட்டைப்புத்தூரில் உள்ள தோழியின் வீட்டுக்கு சென்று விட்டு, மறுநாள் தங்களது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

தற்கொலை முயற்சி

பின்னர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் புஷ்பா, ரமணியம்மாள், ஜோதிகா, சவுந்தர்யா ஆகிய 4 பேரும் பள்ளிக்கு செல்லாமல், அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதை அறிந்த அவர்களது பெற்றோர்கள், மாணவிகள் 4 பேரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மாணவிகள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு விடுதியில் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் நேற்று காலை அவர்கள் 4 பேரும் வாந்தி எடுத்துள்ளனர். இதைப் பார்த்த விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் சக மாணவிகள், 4 பேரையும் மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 4 பேரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிகள்

இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் 4 மாணவிகளையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்து அறிவுரை கூறினர்.

தொடர்ந்து கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறும்போது, மாணவ- மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடாமல் இருக்க, பள்ளிக்கூடங்களில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் 4 மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story