வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்


வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம்
x

வடமதுரை அருகே முயல் வேட்டையாடிய 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் பகுதியில் வனத்துறையின் எரியோடு பிரிவு வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர் சவரியார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது கன்னிமார்பாளையம் கரிசமடை ஊருணி அருகில் 4 பேர் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் பிடித்து அய்யலூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் பிடிபட்ட 4 பேரிடமும் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் விசாரணை நடத்தினார். அதில், அவர்கள் புத்தூர் பூசாரிபட்டியை சேர்ந்த சடையன் (வயது 60), காட்டுராஜா (55), பழனியப்பன் (40), பாக்கியராஜ் (30) என்பதும், அவர்கள் கன்னி வலைகள் மற்றும் இரும்பு கம்பிகளை வைத்து முயலை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்பேரில், சடையன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கன்னி வலைகள், இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.



Next Story