மலையில் சிக்கி தவிக்கும் 4 ஆடுகள்
மயிலாடும்பாறை அருகே, மேய்ச்சலுக்கு சென்றபோது 4 ஆடுகள் மலையில் சிக்கி பரிதவித்து வருகின்றன.
மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள்
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே தென்பழனி கிராமத்தில் முருகன் கோவில் மலை உள்ளது. இந்த மலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு செல்வது வழக்கம்.
காலையில் அங்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாலையில் தானாக வீடுகளுக்கு திரும்பும். மயிலாடும்பாறை போலீஸ் நிலையம் எதிரே, முருகன் கோவில் மலையில் சரிவான பகுதியின் இடையே குறிப்பிட்ட அளவு சமதள பகுதி உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 ஆடுகள் மற்றும் 2 குட்டிகள் சமதள பகுதியில் நின்றிருப்பதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். அப்போது வழக்கமாக மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள், ஓய்வெடுத்து கொண்டிருப்பதாக பொதுமக்கள் நினைத்தனர்.
4 நாட்களாக தவிப்பு
இந்நிலையில் 4-வது நாளாக நேற்று வரை 4 ஆடுகளும் தொடர்ந்து அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. எனவே மேய்ச்சலில் இருந்த ஆடுகள் தவறுதலாக சமதள பகுதிக்கு சென்று விட்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் ஒரே இடத்தில் மேய்வது இல்லை. மாலை நேரத்தில் தானாக ஆடுகள் வீட்டுக்கு சென்று விடும். ஆனால் கடந்த 4 நாட்களாக, ஒரே இடத்தில் 4 ஆடுகள் நிற்பதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகவே தெரிகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே உச்சி வெயிலில் ஒதுங்கி நிற்க நிழல் கூட இல்லாமல் மலையில் பரிதவித்து நிற்கும் ஆடுகளை பார்க்கவே மன வருத்தமாக உள்ளது. ஆடுகள் நின்றுள்ள பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லை. சிறிதளவு செடி, கொடிகள் மட்டுமே உள்ளன. எனவே ஆடுகள் இரையை மட்டும் தின்று விட்டு தண்ணீர் குடிக்காமல் தொடர்ந்து தவித்து வருகிறது.
மீட்க நடவடிக்கை
ஆடுகள் நிற்கிற மலைச்சரிவுக்கு செல்ல வேண்டுமானால் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. இதனால் ஆட்டின் உரிமையாளர்கள் அங்கு செல்ல முடியாது. எனவே ஆட்டின் உரிமையாளர்களும் ஆடுகளை மீட்காமல் தானாக மேலே ஏறி வந்து விடும் என்று நம்பிக்கையில் உள்ளனர். எனவே தீயணைப்பு வீரர்கள் ஆடுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக கடமலைக்குண்டு தீயணைப்பு படையினர் கூறுகையில், ஆடுகள் சிக்கி தவிப்பது குறித்து எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்தவுடன் ஆடுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.