மழைக்கு 4 வீடுகள் சேதம்
மடத்துக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கணியூரில், கடத்தூர் சாலை உயரம் அதிகரிக்கப்பட்ட நிலையில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததால் வீதிகளில் மழைநீர் தேங்கியது.வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.மேலும் துங்காவி, மெட்ராத்தி ஊராட்சிகளில் வீதிகளில் தேங்கிய மழைநீரை ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.மேலும் மடத்துக்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்ட நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தால் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் கனமழையால் மடத்துக்குளத்தை அடுத்த சங்கராமநல்லூர்,தெற்கு கண்ணாடிபுத்தூர், நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 4 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மடத்துக்குளம் தாசில்தார் செல்வி பாதிக்கப்பட்ட ருத்ராபாளையத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மனைவி பொன்னுத்தாய், தெற்கு கண்ணாடிபுத்தூரில் ஏழூரப்பன், குமரவேல், நீலம்பூரைச் சேர்ந்த காளியம்மாள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்கினார்.
---