தூத்துக்குடி மாவட்டத்தில் 4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கமாத்திரை வினியோகம்


தூத்துக்குடி மாவட்டத்தில் 4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கமாத்திரை வெள்ளிக்கிழமை வினியோகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 4¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது.

முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள தாய்மார்களுக்கும் (கர்ப்பினி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்கத்துக்கான அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 566 குழந்தைகளுக்கும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 452 தாய்மார்களுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் 1583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 119 தனியார் பள்ளிகள், 35 கல்லூரிகள், 1477 அங்கன்வாடி மையங்களில் நடந்தது.

தொடக்க நிகழ்ச்சி

இந்த மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் கொடுப்பதன் மூலம் குடலில் உள்ள புழு தொற்று நீங்குவதுடன் ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் குடற்புழு தாக்கத்தால் ஏற்படக்கூடிய வயிற்று போக்கு, வாந்தி, சோர்வு மற்றும் படிப்பில் ஆர்வமின்மை ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் பள்ளியில் நடந்த முகாமை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, நகர் நல அலுவலர் அருண்குமார், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் விடுபட்டவர்களுக்கான முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.

வடிகால் பணிகள் ஆய்வு

மேலும், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தோங்காமல் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. நந்தகோபாலபுரம், ரகுமத்நகர், எஸ்.கே.எஸ்.ஆர்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதியதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கால்வாய்களும் தூர் வாரப்பட்டு உள்ளன. இந்தப்பணிகள் அனைத்தையும் வரும் மழைக்காலத்துக்கு முன்பு முடிக்க ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் மழைக்காலத்துக்கு முன்பாக முடிக்கப்படும் என்று கூறினார்.


Next Story