குமரியில் 4 வழி சாலை பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை ;அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
குமரியில் 4 வழிச்சாலை பணிகள் விரைவில் ெதாடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுள்ளிவிளை ஊராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்,
குமரியில் 4 வழிச்சாலை பணிகள் விரைவில் ெதாடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுள்ளிவிளை ஊராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கட்டிட திறப்பு விழா
குமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியில் உள்ள நுள்ளிவிளை ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு கட்டிடத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது கூறியதாவது:-
கண்டன்விளை பகுதியில் ரூ.28.10 லட்சம் செலவில் நுள்ளிவிளை ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
4 வழிச்சாலை பணிகள்
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலைப்பணிக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ரூ.1,150 கோடியில் மறுமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். ஓராண்டில் குமரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் பணிகளுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
புதுமைப் பெண் திட்டத்தினால் 72 சதவீதம் பெண்கள் உயர்கல்வி படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலேயே முதல் முறையாக கண்டன்விளை பகுதியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.20 ஆயிரம் பரிசு
முன்னதாக கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், மும்முறை தாண்டுதலில் தங்கப்பதக்கமும் பெற்ற அபிநயாவுக்கு நுள்ளிவிளை ஊராட்சி சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தக்கலை ஒன்றிய ஆணையர் ராஜா ஆறுமுகயினார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு, நுள்ளிவிளை ஊராட்சி செயலாளர் சுபா, அருட்பணியாளர்கள் சகாய ஜஸ்டஸ், மரிய சூசை, அரசு வக்கீல் ரமேஷ்பாபு, அருளாணந்த ஜார்ஜ், ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.