ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது
கோவை வடவள்ளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை,
கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). என்ஜினீயர். இவரது மனைவி லக் ஷயா (29). பட்டதாரி. இவர்களுக்கு 10 வயதில் யக்சிதா என்ற மகள் இருந்தார். யக்சிதா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களுடன் ராஜேஷின் தாய் பிரேமாவும் (74) வசித்து வந்தார். கடந்த 3 நாட்களாக ராஜேசின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். லக் ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இதில் லக் ஷயா எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு ஜெயபாரத், தீபக் ஆகியோர்தான் காரணம் என்று எழுதி இருந்தது. தொடர்ந்து போலீசார் லக் ஷயாவின் செல்போனை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில், லக் ஷயாவுக்கும், சின்மயா நகரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜெயபாரத் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் நட்பாக பழகி வந்தனர்.
ரூ.25 லட்சம்
அப்போது லக் ஷயா, ஜெயபாரத்திடம் இருந்து தனது தேவைக்காக அடிக்கடி பணம் வாங்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஜெயபாரத் தனது நண்பரான ஆசிரியர் தீபக்கிடம் இருந்து பணம் வாங்கி லக் ஷயாவிடம் கொடுத்தார்.
இவ்வாறு ரூ.25 லட்சம் வரை லக் ஷயாவுக்கு ஜெயபாரத் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது
இந்த நிலையில் ஜெயபாரத் மற்றும் தீபக் ஆகியோர் லக் ஷயாவிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் லக் ஷயா அவ்வளவு பெரிய தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஜெயபாரத், தீபக் ஆகியோர் லக் ஷயாவின் கணவரிடம் சென்று, உனது மனைவி எங்களிடம் பணம் வாங்கியுள்ளார் என்றும், அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த்தனையை காண்பித்துள்ளனர்.
இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது ஒருபுறம் இருக்க பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜேஷ், லக் ஷயா குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கு துண்டியதாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஜெயபாரத், அவரது நண்பர் தீபக் ஆகியோரை கைது செய்தனர்.