தொட்டிலில் போடப்பட்ட 4 மாத பெண் குழந்தை பலி
ஜோலார்பேட்டை அருகே தொட்டிலில் போடப்பட்ட 4 மாத பெண் குழந்தை பலியானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு கணேஷ் (வயது 2) என்ற ஆண் குழந்தையும், பிரதிக்ஷா என்ற 4 மாத பெண் குழந்தையும் உண்டு.
கடந்த 18-ந் தேதி பிரியதர்ஷினி தனது 4 மாத பெண் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தொட்டிலில் கிடத்தி உள்ளார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் இருந்துள்ளது. குழந்தைக்கு வீட்டிலேயே மருத்துவம் பார்த்துள்ளனர். அதன் பிறகு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து தாயார் பிரியதர்ஷினி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.