கொலை வழக்கில் கைதான மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் கொலை வழக்கில் கைதான மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிவந்திபட்டி போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 21.08.2023 அன்று கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த பார்வதிநாதன் (வயது 25) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (20), மாயாண்டி என்ற மதன் (19) ஆகியோர் கடந்த 16-ந்தேதி அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணாபுரம் செல்வலெட்சுமி நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்ற இட்லி மணி (19), மேலப்பாளையம் குறிச்சி ராஜத்தி நகரை சேர்ந்த சின்னத்துரை (21), சுடலை கிருஷ்ணன் என்ற முருகன் (37), கீழ முன்னீர்பள்ளம், நடுத்தெருவை சேர்ந்த சின்னத்துரை (21) ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.