வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 4 கைதிகள் விடுதலை


வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 4 கைதிகள் விடுதலை
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் இருந்து மேலும் 4 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

வேலூர்

4 கைதிகள் விடுதலை

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் மற்றும் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரையின் 113-வது பிறந்தநாளையொட்டி நீண்டகாலமாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்து வரும் 47 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலையாவதற்கு தகுதியானவர்கள் ஆவர்.

அவர்களில் பல்வேறு கட்டங்களாக நேற்று முன்தினம் விடுதலையான 4 பேரையும் சேர்த்து இதுவரை 31 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வேலூர் ஆண்கள் ஜெயிலில் இருந்து நேற்று மேலும் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணைகளை வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் வழங்கினார்.

மறுவாழ்விற்கான உதவிகள்

தொடர்ந்து 4 பேருக்கும் தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கம் சார்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 21 வகையான மளிகை பொருட்கள் மற்றும் மறுவாழ்விற்கான உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க துணைத்தலைவர் வக்கீல் விஜயராகவலு தலைமை தாங்கினார். வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன், விடுதலையான 4 பேருக்கும் மளிகைபொருட்கள், மறுவாழ்விற்கான உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்க செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் சீனிவாசன், மருத்துவ அலுவலர் பிரகாஷ் அய்யப்பன், ஜெயில் அலுவலர் மோகன்குமார், ஜெயில் நலஅலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story