4 தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்


4 தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:30 AM IST (Updated: 10 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தரமில்லாமல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்த 4 தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரியில் தரமில்லாமல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்த 4 தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் தேயிலையை, கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். தொழிற்சாலை மூலம் விவசாயிகளுக்கு அதற்கான விலை வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தரமான தேயிலையை வினியோகித்தால், உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளின் தரம் அதிகரித்து விற்பனை கூடும் எனவும், பச்சை தேயிலைக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிகாரிகள் உறுதியளித்து வருகின்றனர். தென்னிந்திய தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் மாத விலை விவசாயிகளுக்கு தொழிற்சாலைகள் வழங்குகிறதா என ஆய்வு செய்து வருகிறது.

தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்

சமீபத்தில் தரமற்ற தேயிலைத்தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தேயிலை விலை குறைந்து வருவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை தொழிற்சாலைகளில் தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தேயிலைத்தூளின் தரம், சுகாதாரம், சரியான பதிவுகளை பராமரித்தல், விவசாயிகளுக்கு ஆன்லைன் கட்டணம் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் 4 தொழிற்சாலைகளில் தரமில்லாமல் தேயிலைத்தூள் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு 4 தொழிற்சாலைகளுக்கு தேயிலை வாரிய அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மேலும் அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வங்கி மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதுபோன்ற ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story