செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
செஞ்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவர் செஞ்சி கூட்டு ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், அவரது முகத்தில் மயக்கப்பொடியை தூவி, சக்கராபுரம் பூங்காவிற்கு கடத்தி சென்று, அவர் அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து முருகன் எழுந்து பார்த்தபோது தன்னிடம் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து செஞ்சி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் செஞ்சி பகுதியில் அடிக்கடி, தொடர் திருட்டு, வழிப்பறி நடைபெற்று வந்ததால், அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டா் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷிணி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரசுப்பிரமணியன், ஆனந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் செஞ்சி மேல்மலையனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
4 பேர் கைது
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரத்தை சேர்ந்த சதீஷ்(வயது 36), வேலூர் பழைய நகரை சேர்ந்த சேகர்(51), வேலூர் வள்ளிமலையை சேர்ந்த அருணாசலம்(61), வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த நல்லமுகமது(66) ஆகியோர் என்பதும், இவர்கள் செஞ்சி கூட்டு ரோட்டில் நின்று கொண்டிருந்த முருகனின் முகத்தில் மயக்கப்பொடியை தூவி அவரிடம் இருந்த நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் செஞ்சி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், இவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.