மதுபாட்டில்களை திருடிய 4 பேர் கைது


மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடையில் திருட்டு

மன்னார்குடி அருகே முத்துப்பேட்டை ரோட்டில் சேரன்குளம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 3-ந்தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மேலும் அந்த டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த 2 கண்காணிப்பு கேமராவையும் சேதப்படுத்தி சென்றனர்.

இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மன்னார்குடி நகரம் மற்றும் சேரன்குளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியவர்கள் மன்னார்குடி அருகே வாஞ்சூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மறைந்திருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

4 பேர் கைது

விசாரணையில் அவர்கள், மன்னார்குடியை அடுத்த பாமணி உள்ளூர் வட்டம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 23), பா.பிரவீன் (23), நா.பிரவீன் (23), திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23) ஆகிய 4 பேர் என்பதும். இவர்கள் சேரன்குளம் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடியதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாருக்கு பாராட்டு

டாஸ்மாக் கடை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.


Next Story