கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டுகள் வீசிய 4 பேர் கைது
கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டுகள் வீசிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் உள்ள நேசன் கலாசாலை பள்ளிக்கூட வீதியில் கடந்த 1-ந்தேதி நள்ளிரவு மர்மநபர்கள் சாலையில் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதனால் அங்குள்ள வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள், வெடிகுண்டுகள் வெடித்ததால் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிலர் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டுகள் வீசிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞாநேசன் (வயது 43). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணதேவன்பட்டி, நேசன் கலாசாலை பள்ளிக்கூட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும், ஞாநேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ஞாநேசனை தாக்கினர். பின்னர் அங்கிருந்து காமயகவுண்டன்பட்டிக்கு வந்த அவர், தனது உறவினர்களான சிவனாண்டி. (45), சங்கிலி (44), மகேந்திரன் (46), சுருளி (44) ஆகியோரிடம் நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து உறவினர்கள் 4 பேரும் சேர்ந்து, நேசன் கலாசாலை பள்ளிக்கூட வீதியில் வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இவர்களில் சங்கிலி, அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் பாறைகளை உடைக்க பயன்படும் நாட்டு ெவடிகுண்டுகளை கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிவனாண்டி, சங்கிலி, மகேந்திரன், சுருளி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.