ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் 4 பேர் கைது
500 ரூபாய் நோட்டு கொடுத்தால் 2 ஆயிரம் நோட்டு தருவதாக கூறி 2 பேரிடம் போலீஸ் சீருடை அணிந்து ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.500-க்கு ரூ.2 ஆயிரம் நோட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 26), மின்வாரிய ஒப்பந்ததாரர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முகமது ஜமீல் (30), ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர். இவர்கள் இருவரின் செல்போன் எண்ணையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்மநபர் தொடர்பு கொண்டு குமார் என்ற பெயரில் பேசினார்.
அப்போது அவர் பெங்களூருவில் இருந்து பேசுவதாகவும், 500 ரூபாய் நோட்டு ஒன்று கொடுத்தால் அதற்கு ஈடாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு தருவதாகவும் கூறி உள்ளார். இதையடுத்து ஞானபிரகாஷ் ரூ.25 லட்சமும், முகமது ஜமீல் ரூ.15 லட்சமும் ஏற்பாடு செய்து குமாரை தொடர்பு கொண்டனர். அதற்கு அவர் தனது நண்பர்களுடன் வேலூரில் வைத்து பணத்தை பெற்றுக் கொள்வதாக கூறினார்.
ரூ.40 லட்சம் பறிப்பு
அதன்படி இருவரும் பணத்துடன் கடந்த 4-ந் தேதி வேலூருக்கு வந்தனர். வேலூர் கொணவட்டம், முள்ளிப்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் 2 பேரிடம் இருந்து குமார் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை பெற்றனர். அப்போது ஒரு காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த நபர் உள்பட 4 பேர் இறங்கினர். போலீஸ் சீருடை அணிந்திருந்தவர் தன்னை துணை போலீஸ் சூப்பிரண்டு என்று அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடம் தனித்தனியாக போலீஸ் பாணியில் விசாரணை நடத்துவதுபோல் பேசினார். அப்போது ஞானபிரகாஷ், முகமது ஜமீல் ஆகியோர் பணம் மாற்ற வந்த தகவலை தெரிவித்தனர்.
அதற்கு அவர் இது 'ஹவாலா' பணமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் வாங்கி கொள்ளுங்கள் என்று 2 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்தை வாங்கி விட்டு காரில் அங்கிருந்து சென்றனர். அதைத்தொடர்ந்து குமார் உள்பட 4 பேர் உடனடியாக அங்கிருந்து சென்று விட்டனர்.
4 பேர் கைது
இதையடுத்து ஞானபிரகாஷ், முகமது ஜமீல் ஆகியோர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரித்தபோது மர்மகும்பல் போலீஸ் சீருடையில் வந்து ஏமாற்றி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
அதில் பெங்களூருவை சேர்ந்த டேனியல் (50), அருண்குமார் (35), அம்ரோஸ் (34), கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிபட்டணத்தை சேர்ந்த கண்ணன் (28) என்பதும், டேனியல் என்பவர் போலீஸ் சீருடை அணிந்து துணை போலீஸ் சூப்பிரண்டு என்று கூறி பணத்தை வாங்கி சென்றவர் என்பதும், மேலும் இதில் பலர் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், காட்பாடி தாலுகா பொன்னை பகுதியை சேர்ந்த குமார் என்ற நடராஜன் என்பவர் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பதும், ஒருவருக்கு ஒருவர் அதிக பழக்கம் இல்லாத 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் நடராஜன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், டேனியல் தலைமையிலான கும்பலுக்கு ரூ.4 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்தது.
முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு
இதையடுத்து டேனியல் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான குமார் என்ற நடராஜன் உள்பட மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடராஜன் பிடிபட்டால் தான் இதுபோன்று எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு தகவல்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.