குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நடவடிக்கையின் பேரில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் பெரியார் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது43). இவர் மீதும், நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே திருமாளம் அல்லிக்குளத்தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ரமேஷ் (28) என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோல் சாராய வியாபாரிகளான தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே பாப்பாக்குடி பெரியதெருவை சேர்ந்த கார்த்திக் (26), பசுபதீஸ்வரர்கோவில் தெருவை சேர்ந்த சிவா (42) ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன.
குண்டர் சட்டத்தில் கைது
ஆனந்தன், ரமேஷ், கார்த்திக், சிவா ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், கும்பகோணம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி ஆகியோர் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தனர். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.