வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 4 பேருக்கு அபராதம்
கடையநல்லூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனச்சரகம் தெற்கு பீட்டிற்கு உட்பட்ட மாவடிக்கால் பகுதியில் வனவிலங்குகளை நாய்கள் வைத்து வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன், சிறப்பு பிரிவு வனவர் ரவீந்திரன், வனக்காப்பாளர் மகாதேவன், வன காவலர்கள் ஆனந்த், சுகந்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆறுமுகம், சுப்புராஜ் ஆகியோர் மாவடிக்கால் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வனவிலங்குகளை நாய்களை வைத்து வேட்டையாட சென்றதாக, கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் தங்கதுரை (வயது 30), சுடலைமுத்து மகன் கசின்குமார் (19), பாண்டி மகன் சிவா (21), சின்னத்துரை மகன் அஜய் (21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், வனச்சரகர் சுரேஷ் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.