கஞ்சாவுடன் 2 மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
பூதப்பாண்டி அருகே சுடுகாடு பகுதியில் கஞ்சா செடி வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே சுடுகாடு பகுதியில் கஞ்சா செடி வளர்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
4 பேர் சிக்கினர்
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கஞ்சா விற்பனை செய்யும் நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இந்தநிலையில் தோமையார்புரம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் தோமையார்புரம் பகுதிக்கு விரைந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 5 பேரை பிடித்த போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் 4 பேரிடம் சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா செடி வளர்த்தது அம்பலம்
பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்திய போது பிடிபட்டவர்கள் இறச்சகுளம் ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 20), தோமையார்புரம் பகுதியை சேர்ந்த பாலி டெக்னிக் மாணவன் தமிழரசன் (19) மற்றும் சக்தி (19), 17 வயது மாணவன் என்பதும், தப்பி ஓடியவர் தோமையார்புரம் பகுதியை சேர்ந்த ஞானராஜ் மகன் சஞ்சய் (22) என்பதும் தெரியவந்தது.
மேலும் இறச்சகுளம் விஷ்ணுபுரம் சுடுகாட்டு பகுதியில் 5 பேரும் சேர்ந்து கஞ்சா செடி வளர்ப்பதும், பிடிபட்ட கணேஷ் மீது அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தொடர்புடையவர் என்பதும் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
உடனே பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் தனிப்படையினர் சுடுகாடு பகுதிக்கு விரைந்து சென்று கஞ்சா செடியை அழித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.