சாலை விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்
சாலை விபத்தில் சிக்கி சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாலாபேட்டை அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் தரணிஷ் (வயது 15). இவர் சம்பவத்தன்று வீரியபாளையம்- சேங்கல் சாலையில் பாப்பையம்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுவாடி பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் தரணிஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சிவகாமி (54), தேவி ஸ்ரீ (24), பார்வதி (44). உறவினர்களான இவர்கள் 3 பேரும் திம்மாச்சிபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிவசாமி, தேவிஸ்ரீ, பார்வதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.