மாணவி உள்பட 4 பேர் படுகாயம்
வெவ்வேறு விபத்துகளில் மாணவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி,
வெவ்வேறு விபத்துகளில் மாணவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மோதியது
சாத்தூர் மேலக்காந்திநகரை சேர்ந்தவர் கருப்பசாமி மகள் விஜயலட்சுமி (வயது 16). இவர் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது சைக்கிளில் விஜயலட்சுமி சாத்தூர்-தாயில்பட்டி ரோட்டில் செல்லும் போது அந்த வழியாக வந்த கார் மாணவியின் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து கருப்பசாமி சாத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் காரை ஓட்டி வந்த பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த பால முருகன் (27) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து
இதேபோல் வத்திராயிருப்பு நாராயணபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (31) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டியின் தந்தை மாரியப்பன் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துப்பாண்டி நிலைதடுமாறி விழுந்தாரா? அல்லது ஏதாவது வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2 பேர் படுகாயம்
வெம்பக்கோட்டை அருகே உள்ள கே.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பசாமி (30). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஆலையில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சரக்கு வாகனத்தில் பட்டாசுகளை ஏற்றி கொண்டு அய்யனார்காலனி அருகில் வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சரக்கு வாகனத்தின் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த முருகேசன் (60), பாபு (24) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து பெரியகருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.