அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெட்ரோல் குண்டு வீச்சு

கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் சொட்டால் வண்ணம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மகன் அஜித்குமார்(வயது 27), ராதாமங்கலம் எறும்புக்கண்ணி மெயின் ரோட்டை சேர்ந்த முருகையன் மகன்கள் தமிழ்க்குடிமகன் (30), புகழேந்திரன்(29), பட்டமங்கலம் புழுதிக்குடியை சேர்ந்த தங்கமணி மகன் மணிமாறன்(30) ஆகிய 4 பேரும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேவூர் ஊராட்சி சந்தைப்பேட்டையில் டாஸ்மாக் கடைக்கு சென்று பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டி மதுபானம் வாங்கி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையை ஏலம் எடுத்து நடத்தி வரும் செந்தில் என்பவர், 4 பேரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து கீழ்வேளூர் போலீசில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் விஜயகுமார் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அன்று இரவு செந்திலின் உறவினரான, தேவூர் காந்தி நகரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பாஸ்கரன் (50) என்பவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

குண்டர் சட்டத்தில் கைது

இது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் அஜித்குமார், தமிழ்க்குடிமகன், புகழேந்திரன், மணிமாறன் ஆகிய 4 பேரையும் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இந்தநிவையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண் தம்புராஜூக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, கீழ்வேளூர் போலீசார் அந்த 4 பேரையும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story