கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தில் தொழிலதிபர்-மகன்கள் உள்பட 4 பேர் கைது
கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தில் தொழிலதிபர்-மகன்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
லால்குடி, ஆக.13-
லால்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விசு என்ற விஸ்வநாதன்(வயது 65). இவரது மகன்கள் வினோத் (39), விவேக் (35). விசுவின் உதவியாளர் செந்தில்குமார் (56). தொழிலதிபரான விசு, லால்குடியில் நிதி நிறுவனம், நகை அடகுக்கடை போன்றவை நடத்தி வருகிறார். இந்நிலையில், லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர், தனது தென்னந்தோப்பு, வீடு ஆகியவற்றின் பத்திரங்களை விசுவிடம் அடமானமாக வைத்து ரூ.25 லட்சம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் ஜேம்சுக்கு தெரியாமல் தென்னந்தோப்பை பத்திரப்பதிவு அலுவலர் உதவியோடு விசு பெயரில் கிரயம் செய்ததாகவும், இது பற்றி ஜேம்ஸ், விசுவிடம் கேட்டபோது, ரூ.25 லட்சத்துடன் மேலும் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஜேம்ஸ் மீது விசு திருச்சி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இதையடுத்து ஜேம்ஸ், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமாரிடம் புகார் செய்தார். இதேபோல், விசுவிடம் சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்று பாதிக்கப்பட்டதாக லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சேர்ந்த விஜி, பரமசிவபுரம் பகுதியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், வாளாடி செம்பழனியைச் சேர்ந்த அருண் போஸ், பூவாளுரைச் சேர்ந்த சரவணன் ஆகியோரும் ஐ.ஜி.யிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஐ.ஜி. உத்தரவின்பேரில், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் விசுவின் வீடு மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். இதில் பல பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் விசு, அவரது மகன்கள் வினோத், விவேக், உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் மீது கந்து வட்டி ஒழிப்பு சட்டத்தின் கீழ் பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.