டிரைவர்- கண்டக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்


டிரைவர்- கண்டக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
x

நாகர்கோவிலில் பழுதான அரசு பஸ்சை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரத்தில் டிரைவர்- கண்டக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பழுதான அரசு பஸ்சை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரத்தில் டிரைவர்- கண்டக்டர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

பஸ்சை தள்ளிய மாணவிகள்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மணக்குடிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை வேளையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் அண்ணா பஸ் நிலையத்தைவிட்டு வெளியேறி கேப் ரோட்டில் பழைய தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது. அந்த பஸ்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் பயணம் செய்தனர்.

அவர்கள் கல்லூரி தொடங்குவதற்கு முன்பு செல்ல வேண்டும் என்பதற்காக அந்த மாணவிகள் பஸ்சை விட்டு இறங்கி பஸ்சை தள்ளி, டிரைவருக்கு உதவினர். அதன்பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டது. கல்லூரி மாணவிகளும் அதே பஸ்சில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பயணித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்காலிக பணியிடை நீக்கம்

இந்த விவகாரத்தில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பஸ்சின் டிரைவர், கண்டக்டர், டெப்போவில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளக்கூடிய ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாணவிகளை பழுதான பஸ்சை தள்ளவைத்ததால் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களிடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story