தறிகெட்டு ஓடிய லாரி மோதி தந்தை- மகள் உள்பட 4 பேர் பலி
மேச்சேரி:-
மேச்சேரி அருகே லாரி தறிகெட்டு ஓடி மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் தந்தை- மகள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தறிகெட்டு ஓடிய லாரி
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்- தாரமங்கலம் சாலையில் செலவடை பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென தறிகெட்டு சாலையில் ஓடியது. எதிரே வந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில் அந்த வழியாக வந்த 3 மோட்டார் சைக்கிள்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமானது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டனர்.
4 பேர் பலி
நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டவர்கள் மீது லாரி ஏறி இறங்கியது. அப்படி இருந்தும் டிரைவர் லாரியை நிறுத்தியதாக தெரியவில்லை. அந்த பகுதியில் உள்ளவர்கள் விரட்டி சென்று லாரியை மடக்கி பிடித்து நிறுத்தினர். இதற்கிடையே லாரி மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
தகவல் அறிந்து ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு ஜலகண்டாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காயம் அடைந்த குழந்தை ஒன்று பரிதாபமாக இறந்தது. மேலும் 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தந்தை- மகள்
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, தாசில்தார் வல்ல முனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்டறிந்தனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்தில் பலியானவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர்கள் தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி அருகே உள்ள குப்பக்கவுண்டன்வளவு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 26), அவருடைய மகள் யுவஸ்ரீ (1½), அக்காள் மகன் சந்தோஷ் (15) ஆகியோர் என்பது தெரியவந்தது. இன்னொருவர் ஜலகண்டாபுரம் அருகே வண்டிமேடு பகுதியை சேர்ந்த சாந்தி (40) என்பது தெரியவந்தது.
ஆஸ்பத்திரிக்கு வந்த போது...
குழந்தை யுவஸ்ரீக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. எனவே பாலகிருஷ்ணன், தன்னுடைய அக்காள் மகன் சந்தோசை உடன் அழைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போதுதான் இந்த விபத்து நடந்துள்ளது.
இதேபோல் மேட்டூரை சேர்ந்த வசந்தகுமார், தன்னுடைய உறவினர் வண்டிமேடு பகுதியை சேர்ந்த சாந்தி, அவருடைய மகள் இந்துமதி (23), இந்துமதி மகள் இனியா (2) ஆகியோரை அழைத்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரத்துக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. காயம் அடைந்த இன்னொருவர் மேச்சேரி அருகே மானத்தாள் சேர்ந்த மாதையன் (30) என்பதும், அவர் தனியாக ஜலகண்டாபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றதும் தெரியவந்தது.
மதுபோதையில் டிரைவர்?
மேலும் போலீஸ் விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த காட்டுராஜா (31) என்பது தெரியவந்தது. அவர், மதுபோதையில் இருந்ததாகவும், அதனால்தான் லாரி தறிகெட்டு சாலையில் ஓடியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருந்தாலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று மாலை நடந்த இந்த பயங்கர விபத்து சம்பவம் ஜலகண்டாபுரம், தாரமங்கலம் பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.