சயான் உள்பட 4 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சயான் உள்பட 4 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சயான் உள்பட 4 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
தற்போது கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஒத்திவைப்பு
இந்தநிலையில் கோடநாடு வழக்கு விசாரணை இன்று மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜிதின் ஜாய் ஆகிய 4 பேர் மட்டும் ஆஜராகினர். சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வக்கீல்களான ஷாஜகான், கனகராஜ் கூறுகையில், கோடநாடு வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. சயான் குடும்பத்தினர் விபத்தில் சிக்கியது குறித்தும், கனகராஜ் விபத்தில் சிக்கியது குறித்தும் போலீசார் மற்றும் தடயவியல் துறை மூலம் புலனாய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணைக்கு அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்றனர்.