துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட 4 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
வேலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட 4 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவூர்:
மோசடி
விராலிமலை ஒன்றியம் வேலூர் ஊராட்சியில் ராதா சுப்பிரமணியன் என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். ஊராட்சியின் 6-வது வார்டு உறுப்பினர் பன்னீர்செல்வம் என்பவர் ஊராட்சி துணை தலைவராக உள்ளார். மேலும் 8 பேர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ராதா, ஊராட்சி துணை தலைவர் பன்னீர்செல்வத்தை ஏமாற்றி மோசடியாக கையெழுத்து பெற்றுக் கொண்டு ஊராட்சி வங்கி கணக்கில் இருந்து பல லட்சக்கணக்கில் பணம் மோசடியாக எடுத்துள்ளதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.
கையெழுத்திடும் அதிகாரம் நிறுத்தி வைப்பு
மேலும் இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு மதுரை கிளை இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆகியோர் விசாரணை நடத்தி வேலூர் ஊராட்சி தலைவர் ராதாவிடம் இருந்து ஊராட்சியின் காசோலை மற்றும் வரவு, செலவு வவுச்சர்களில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி நிர்வாக செலவினங்களை கவனித்து வந்தார்.
கிராம சபை கூட்டம்
இந்நிலையில் விராலிமலை ஒன்றியத்தில் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல வேலூர் ஊராட்சியிலும் நேற்று காலை 11 மணியளவில் ஊராட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் வந்திருந்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது ஊராட்சி துணை தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் சின்னத்தங்கம், 5-வது வார்டு உறுப்பினர் நீலா, 8-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சுசீந்திரனிடம் தனித்தனியே ஒரு மனுவை அளித்தனர்.
ராஜினாமா கடிதம்
அதில் வேலூர் ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராதா ஊராட்சி நிதியை பல்வேறு வகைகளில் முறைகேடாக வங்கியில் இருந்து எடுத்துள்ளார். அதுகுறித்து பலமுறை மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவருடன் இணைந்து ஊராட்சி நிர்வாகத்தில் துணை தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினராக செயல்பட விருப்பமில்லாததால் நாங்கள் எங்களது பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கடிதம் மூலம் கூறியிருந்தனர். இதனால் நேற்று விராலிமலை ஒன்றியம் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.