தீவட்டிப்பட்டியில் மான் தோலை வைத்து வினோத பூஜை-சாமியார் உள்பட 4 பேர் கைது
தீவட்டிப்பட்டியில் மான் தோலை வைத்து வினோத பூஜை செய்த சாமியார் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓமலூர்:
மான் தோலை வைத்து பூஜை
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி தேர்முட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கணேஷ் அனந்தசாமி (வயது 45). சாமியாரான இவர், பொதுமக்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். மேலும் தன்னிடம் வந்தால் குறைகள், நோய்கள் தீரும் என்று கூறி பல்வேறு நூதனமான பூஜைகளையும் செய்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் சாமியார் கணேஷ் அனந்தசாமி, மான் தோலை வைத்து வினோத பூஜை செய்து வருவதாக சேலம் மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர் அவருடைய வீட்டுக்கு சென்று சோதனைசெய்தனர்.
4 பேர் கைது
அப்போது 158 சென்டி மீட்டார் நீளமுள்ள மான் தோல் வனத்துறையினரிடம் சிக்கியது. இதுகுறித்து கணேஷ் அனந்தசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், குறி சொல்லும் போது அது பலிப்பதற்காக மான் தோலை வைத்து கணேஷ் அனந்தசாமி வினோத பூஜையில் ஈடுபடுவது உறுதியானது.
இதையடுத்து அவரிடம் இருந்து மான் தோல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மான் தோலை வைத்திருந்த குற்றத்திற்காக கணேஷ் அனந்தசாமி, இதற்கு உடந்தையாக இருந்ததாக பண்ணப்பட்டியை சேர்ந்த சரவணன் (36), சேலம் மிட்டாபுதூரை சேர்ந்த முத்துராமன் (54), அதே பகுதியை சேர்ந்த சரவணன் (50) ஆகிய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.