கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு


கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கணவர் சாவு

தக்கலை அருகே உள்ள பள்ளியாடி, முருங்கைவிளையை சேர்ந்தவர் ஐடா (வயது 49). இவருடைய கணவர் ராஜ். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இதனால், ஐடா தனது மகனுடன் வசித்து வருகிறார்.

கணவர் இறந்ததில் இருந்து ஐடா மிகவும் துக்கத்தில் இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

நகை பறிப்பு

இந்தநிலையில் சம்பவத்தன்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டில் ஐடா மட்டும் தனியாக இருந்தார். அப்போது, அங்கு ஒரு மர்ம நபர் ஐடாவின் கணவர் இறந்ததை அறிந்து துக்கம் விசாரிப்பதுபோல் வீட்டுக்குள் வந்தார். அந்த மர்ம நபர் துக்கம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவர், ஐடாவின் வாய்க்குள் துணியை அமுக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐடா சத்தம் போட முயன்றார். அதற்குள் அந்த மர்ம நபர், ஐடாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை, காலில் கிடந்த 2 பவுன் தங்க கொலுசு ஆகிறவற்றை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பரபரப்பு

பின்னர், இதுகுறித்து ஐடா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

கணவர் இறந்த நிலையில் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பது போல் நடித்து 4 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story