ராஜஸ்தான் கொள்ளையர்கள் 4 பேர் அதிரடி கைது


ராஜஸ்தான் கொள்ளையர்கள் 4 பேர் அதிரடி கைது
x

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்கள் சினிமா பாணியில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ராஜஸ்தான் கொள்ளையர்கள் 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்கள் சினிமா பாணியில் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.

தனிப்படை

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் அண்மை காலமாக பல்வேறு இடங்களில் உள்ள ஆள் இல்லாத வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்தியேன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ரெயில் மூலம் வட மாநிலத்தை சேர்ந்த 4 குடும்பத்தினர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இவர்களது நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

4 பேர் பிடிபட்டனர்

அதன் பேரில் தனிப்படை போலீசார் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் 4 பேரை தனிப்படை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கடும் தகவல் வெளியானது.

விசாரணையில், அவர்கள் பெயர் சங்கர் (வயது 19), ரத்தன் (25), ராம்பிரசாத் (27), ராமா (39) என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் திருச்சி உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டது.

70 பவுன் நகைகள் கொள்ளை

மேலும் இவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனி அசோக்நகர் மேற்கு விஸ்தரிப்பை சேர்ந்த ரெயில்வே ஊழியர் நாகலெட்சுமி என்பவரது வீட்டில் 70 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை கும்பலுடன் வந்துள்ள பெண்கள் முதலில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் உரிமையாளர்கள் இல்லாததை நோட்டமிட்டு அந்த கொள்ளையர்களிடம் தகவல் கொடுத்து கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

கொள்ளையடித்தவுடன் உடனடியாக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று விடுவார்கள். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டு்ம் தமிழகம் வந்து கொள்ளையில் ஈடுபடுவார்கள்.

திரைப்பட பாணியில்...

இந்த கும்பல் திருச்சி, புதுக்கோட்டை, சேலம், வேலூர், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் `தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படத்தில் வரும் சம்பவத்தை போல இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த கும்பலுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் சிலர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பிடிபட்ட வட மாநில கொள்ளையர்களிடம் விசாரணை நடத்துவதற்காக திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தனிப்படை போலீசார் திருச்சி வந்து முகாமிட்டு்ள்ளனர். விசாரணையின் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் கொள்ளை கும்பலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீண்டும் அவர்களை சிறை காவலில் எடுத்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story