4 வழிச்சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்


4 வழிச்சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும்  மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தல்
x

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை திட்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பஞ்சாயத்து கூட்டம்

குமரி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ் பேசியபோது கூறியதாவது:-

மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து 2022-2023-ம் ஆண்டிற்கு மாவட்ட ஊராட்சி பொது நிதியில் இருந்து பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களுக்கு பதிலாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்ட வேண்டும். குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் ஜல்லி, மணல் மற்றும் கருங்கற்கள் போன்ற கட்டுமான பொருட்கள் கிடைக்க பெறாததால் கட்டுமான பணிகளில் தேக்க நிலை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இதனை நிவர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசை கண்டித்து தீர்மானம்

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். காளிகேசம் பகுதியில் கேபிள் கார் வசதியை சுற்றுலாத்துறை மூலம் ஏற்படுத்தி தரவேண்டும். குமரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு உரிய அழைப்பு விடுக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், குமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வருகை தந்தபோது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை முறையாக அழைக்காததால் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, செலின்மேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கவுன்சிலர்கள் அதிருப்தி

முன்னதாக கூட்டத்தில் மீனவளத்துறை சார்பில் மட்டும் அதிகாரி பங்கேற்றார். மற்ற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அடுத்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த்துக்கு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.


Next Story