குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு 'சீல்'
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை அமைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த திருவண்ணாமலை- செங்கம் சாலையில் ஒருவர், தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தானிப்பாடி பஸ் நிலையம் அருகே ஒருவர், போளூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட போளூர் நம்மியந்தல் கிராமத்தில் ஒருவர், போளூர் ரெயில் நிலையம் அருகில் ஒருவர், சாத்தனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தில் ஒருவர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 கடைகளுக்கு சீல்
இதில் 4 பேரின் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கப்பட்டது. இவர்களிடம் இருந்து 19 கிலோ 110 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தண்டராம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்டராம்பட்டில் இருந்து சாத்தனூர் செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் சுமார் 20 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.