கார், டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கார், டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கார், டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கார், டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தீவிர சோதனை

குமரி மாவட்ட எல்லை பகுதி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் போன்றவை அதிகளவில் கடத்தி செல்வது தொடர் கதையாக உள்ளது.

இதை தடுப்பதற்காக மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

டிரைவர் தப்பியோட்டம்

இந்த நிலையில் நேற்று காலையில் நித்திரவிளை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் தலைமையிலான போலீசார் சாத்தன்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் மற்றும் அதன் பின்னால் மீன்கள் ஏற்றி வந்த டெம்போவையும் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனங்களில் விரட்டிச் சென்று நடைக்காவு சந்திப்பு பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். போலீசார் மடக்கியதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

4 டன் ரேஷன் அரிசி...

டெம்போவில் இருந்த டிரைவரும் தப்பியோட முயன்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து போலீசார் வாகனங்களை சோதனை செய்தபோது, அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனங்களுடன் 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிடிபட்ட டிரைவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பதும், ரேஷன் அரிசி மூடைகளை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட டிரைவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 4டன் ரேஷன் அரிசி, வாகனங்களை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story