டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

4 டன் ரேஷன் அரிசி

நாகர்கோவில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், ராமசந்திரன் மற்றும் போலீசார் நாகர்கோவில்- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் தோவாளை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் முன்பு நின்று வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த அந்த வாகனத்தில் 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மூடைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பட்டுராஜன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதில் அவர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 40) என்பவர் விருதுநகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியதன் பேரில் டெம்போவை ஓட்டி சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பட்டுராஜனை கைது செய்து 4 டன் ரேஷன் அரிசியுடன் டெம்போவையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவை நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் மைதானத்தில் நிறுத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பட்டுராஜனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ரூ.4¼ லட்சம் மதிப்பு

இந்த வழக்கு தொடர்பாக நாகர்கோவிலைச் சேர்ந்த மூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் டெம்போவின் மதிப்பு ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்து 600 ஆகும்.


Next Story