அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; 5 பேர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
கடலூரில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கார் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் உள்ள திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, திடீரென்று டயர் வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி எதிரே உள்ள சாலைக்கு சென்றது. அப்போது தூத்துக்குடியில் இருந்து பண்ருட்டி நோக்கி முந்திரிக் கொட்டை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் இதைக்கண்டு திடீரென பிரேக் பிடித்தார்.
இதைத்தொடர்ந்து பின்னால் வந்த ஒரு கார் லாரியின் பின்புறம் மோதியது. அடுத்து பின்னால் வந்த சரக்கு வேன், ஆம்னிபஸ் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டன. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
5 பேர் படுகாயம்
இந்த விபத்தில் லாரியின் பின்புறம் மோதிய காரில் வந்த திருவெறும்பூரைச் சேர்ந்த அகமது ரஷின் (வயது 26), மஸ்தான்கனி, சரக்கு வேனில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சேர்ந்த தினேஸ்குமார் (22), இளங்கோ (17), மதுரை மேலூரைச் சேர்ந்த பிரசாந்த் (37) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
அதன்பின் விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.