விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 4 கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஓமலூர்,
விமான நிலைய விரிவாக்க பணி
சேலம் விமான நிலையம் விரிவாக்க பணிக்காக நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி ஆகிய ஊராட்சி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஆகிய கிராமங்களில் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்தும், விமான நிலைய விரிவாக்க பணியை கைவிடக் கோரியும், அரசு புறம்போக்கு நிலத்தில் விமான நிலையத்தை அமைக்கக்கோரியும் தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகில் 4 கிராம மக்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த சேலம் விமான நிலைய விரிவாக்க தனி தாசில்தார்கள் சீனிவாசன், பிரகாஷ், காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தீவட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து வருவாய்த்துறையினர் அங்கிருந்து சென்றனர். பொதுமக்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.