100 நாள் வேலை திட்டத்தில் 4 வாரமாக கூலி வழங்கவில்லை
மூங்கப்பட்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 4 வாரமாக கூலி வழங்கவில்லை என்று விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
குடியாத்தம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் மூங்கப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட பெண் விவசாய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 4 வாரங்களுக்கு மேலாக கூலி தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று பெண் தொழிலாளர்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயனிடம் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றியதற்கான கூலியை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தனர்
அப்போது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவர் பி.குணசேகரன், மாவட்ட செயலாளர் ஏகலைவன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன், பீடி சங்க தலைவர்கள் சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கோடீஸ்வரன், மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.குமாரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.