ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பரிதாப சாவு-போலீசாருடன், உறவினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:
சிறுமி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி கோகிலா. இவர்களது மகள் மதுமிதா (வயது 4). இதற்கிடையே கோகிலாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா, தன்னுடைய மகள் மதுமிதாவுடன் சேலம் உம்பிலிக்கம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று காலை மதுமிதாவை குளிப்பாட்டி விட அவளது பாட்டி அம்பிகா தயாரானார். குளிப்பாட்டிய பிறகு அணிவதற்கு ஆடையை எடுக்க வீட்டுக்குள் சென்றார். திரும்பி வந்த போது சிறுமி மதுமிதாவை காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தண்ணீரில் மூழ்கி சாவு
பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டி பகுதியில் தேடினார். அப்போதுதான் அந்த தொட்டியில் சிறுமி மதுமிதா தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தாள். இதைக்கண்டு சிறுமியின் பாட்டி அம்பிகா அய்யோ காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டார்.
அம்பிகா அழுகுரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். தண்ணீரில் தத்தளித்த சிறுமியை தொட்டியை விட்டு வெளியே தூக்கினர். அதற்குள் சிறுமி மதுமிதா பரிதாபமாக இறந்தாள். சிறுமி உடலை பார்த்து தாய் கோகிலா, பாட்டி அம்பிகா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
கோவில் கட்டுமான பணி
தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு முருகன் கோவில் கட்டுமான பணிக்கு தண்ணீர் தேவைக்காக இந்த தொட்டி கட்டப்பட்டுள்ளது.
அந்த கோவில் கட்டுமான பணி அப்படியே கிடப்பில் கிடக்கிறது. அந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பி திறந்தவெளியில் கிடந்துள்ளதும், அதில் மதுமிதா மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.
போலீசாருடன் வாக்குவாதம்
இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறுமியின் உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் தந்தை கோவிந்தராஜ் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். அதன்பிறகு போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
சிறுமி இறந்தது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.