என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஊட்டி,
ஒப்பந்ததாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக என்ஜினீயருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கழிவுநீர் கால்வாய்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு பொறியாளராக எஸ்.ஆர்.வெங்கடேஷ் பணிபுரிந்து வந்தார். அப்போது ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டிச்சோலை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது.
இந்த பணி ஒப்பந்ததாரர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை விடுவிக்க குன்னூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் பாலனிடம், வெங்கடேஷ் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதுகுறித்து பாலன் ஊட்டியில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் 7.3.2006-ந் தேதி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை பாலனிடம் கொடுத்தனர்.
4 ஆண்டு சிறை
இதையடுத்து குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த வெங்கடேசிடம் பாலன் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெங்கடேசை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்தநிலையில் நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. பணத்தை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வெங்கடேசுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரேணுகா ஆஜராகி வாதாடினார். தொடர்ந்து வெங்கடேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.