இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை


இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீடு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நீலகிரி

ஊட்டி,

வீடு பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில், இளநிலை உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெயர் மாற்றம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பள்ளிமனை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கரியமலையில் புதிதாக வீடு வாங்கினார். இதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்கு பெயர் மாறுதல் சான்றிதழ் வாங்க, கடந்த 2008-ம் ஆண்டு கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் ஜெயலட்சுமியை சந்தித்தார். அப்போது பெயர் மாறுதல் சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் தர வேண்டும் என்று ஜெயலட்சுமி கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிவக்குமார் ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அப்போதைய போலீஸ் துணை சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய ரூ.1,800 நோட்டுகளை சிவக்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை சிவக்குமார், பேரூராட்சி அலுவலகத்தில் ஜெயலட்சுமியிடம் கொடுத்தார். அப்போது ஜெயலட்சுமியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

4 ஆண்டு சிறை

இந்த வழக்கு ஊட்டி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், வீடு பெயர் மாற்றத்திற்கு ரூ.1,800 லஞ்சம் கேட்ட பிரிவில் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதமும், புகார்தாரரிடம் இருந்து லஞ்ச பணம் பெற்ற பிரிவில் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் ரேணுகா, கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதைத் தொடர்ந்து ஜாமீனில் இருந்த ஜெயலட்சுமியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story