ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 ஆண்டு சிறை
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி அடிதடி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தண்ணீர்பந்தல்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவருடைய மகன் மீதும் வழக்கு பதிவானது. அவர் சிறுவன் என்பதால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்க அந்த விவசாயி முயற்சி செய்தார்.
இதற்காக அவர் அப்போதைய நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த விவேகானந்தன் (54) என்பவரை அணுகினார். அப்போது வழக்கில் இருந்து அவரது மகனை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று விவேகானந்தன் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
பின்னர் அவர்கள் கொடுத்த யோசனையின்படி அந்த ஆண்டு ஜூலை மாதம் 18-ந் தேதி நம்பியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விவேகானந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
4 ஆண்டு சிறை
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, விவேகானந்தனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.