4 ஆண்டுகளாக பாதியில் முடங்கி கிடக்கும் வீடுகள்


4 ஆண்டுகளாக பாதியில் முடங்கி கிடக்கும் வீடுகள்
x

4 ஆண்டுகளாக பாதியில் முடங்கி கிடக்கும் வீடுகள்

திருவாரூர்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் 4 ஆண்டுகளாக பாதியில் முடங்கி கிடக்கிறது. இதனால் வீடு இன்றி 20 குடும்பங்கள் தவிக்கின்றன.

பிரதமர் வீடு கட்டும் திட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 6-வது வார்டு முதல்சேத்தி பகுதியில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலால் விளைநிலங்கள் மட்டுமின்றி குடிசை வீடுகளும் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு மாற்றாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இந்த பகுதி மக்களுக்கு மாடி வீடுகள் கட்டிதருவதாகவும், கான்கிரீட் வீடுகள் ஒப்பந்த அடிப்படையில் 3 மாதங்களில் கட்டித்தரப்படும் என்றும் அந்த பகுதி மக்களிடம் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் வீடுகள்

இதனை நம்பி இங்கு கூரை வீடுகளில் வசித்து வருபவர்கள் தங்கள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். தற்போது 4 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று வரை 20 கான்கிரீட் வீடுகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவற்றில் சில வீடுகள் அடித்தளம் அமைக்கப்பட்டும், சில வீடுகளில் சுவர் எழுப்பப்பட்டும் வேலை எதுவும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கான்கிரீட் வீடு கட்டும் பணிகளை உடனடியாக தொடங்கி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

வீடு இன்றி தவிப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த மகேந்திரன் கூறியதாவது:-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மாதங்களில் கட்டித்தருவதாக கூறியதால் எங்கள் குடிசை வீடுகளை கூட அகற்றினோம். தற்போது பல ஆண்டு ஆகியும் வீடுகளை கட்டி முடிக்காததால் நாங்கள் குடியிருப்பதற்கு வீடு இன்றி தவிக்கிறோம் என்றார்.

பாதிக்கப்பட்ட பயனாளி கோமதி கூறியதாவது:-

மாடி வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குடியிருந்த கூரை வீட்டையும் அகற்றி விட்டோம். நான்கு ஆண்டுகளாக பணி முடிக்கப்படாமல் உள்ளதால் வீடு வாசல் இன்றி தவிக்கிறோம் என்றார்.


Next Story