ஆசிரியையிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற 4 வாலிபர்கள் கைது
கீரமங்கலத்தில் ஆசிரியையிடம் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்க சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மேரி. இவர் கடந்த மாதம் வகுப்பு முடிந்து மாலை தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கரம்பக்காடு இனாம் கிராமத்தில் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 வாலிபர்கள் கைது
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அந்தோணியார் தெரு பாண்டியன் மகன் சுதாகர் (வயது 20), தாமரங்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரீஸ் (24), நாவலர்நம்பி மகன் விஜயரகுநாத் என்கிற இந்திரஜித் (26), காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் கட்டவாக்கம் சமத்துவபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் மோகன்ராஜ் (21) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து, சென்னையில் விற்கப்பட்ட நகையையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.