தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில்சென்னை கோர்ட்டில் 4 வாலிபர்கள் சரண்
தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
ரெட்டிச்சாவடி,
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி புதுக்கடையை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன் (வயது 25). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த அய்யனார், ஜோசப் ஆகிய 2 பேரும் நண்பர்களாக இருந்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அய்யனாரிடம் இருந்த அன்பரசன், ஜோசப்பிடமும் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அய்யனார், அன்பரசனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி அய்யனார் தரப்பை சேர்ந்த சந்தோஷ் உள்பட 5 பேர் சேர்ந்து அன்பரசனை சம்பவத்தன்று மது குடிக்க அழைத்து, மது அருந்தினர். அப்போது அன்பரசனுக்கு போதை அதிகமானதும், அவரை கொலை செய்து, சிங்கிரிகுடி சுடுகாடு அருகே உள்ள சவுக்குத் தோப்பில் புதைத்துவிட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர். தொடர்ந்து மற்ற 4 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய புதுக்கடையை சேர்ந்த பார்த்தசாரதி (27), அர்ஜூனன் (23), சிங்கிரிகுடியை சேர்ந்த சிலம்பரசன் (26), கார்த்திகேயன் (24) ஆகியோர் சென்னை பீச்ரோட்டில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதுபற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார், சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.