40 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்
40 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சாலை ஓரம் மற்றும் நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துபவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே இருசக்கர வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் மணிமேடை பகுதியில் நோ பார்க்கிங்கில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 40 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதலில் அந்த வாகனங்கள் அனைத்தையும் ஒரே சங்கிலியால் பூட்டு போட்டு பூட்டப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீதை போலீசார் அந்த வாகனத்தின் முன்பகுதியில் வைத்தனர். உரிமையாளர்கள் அபராதத்தை செலுத்திய பிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.