விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியம்
விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.
விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில்நுட்ப மேன்மை திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு 2022-2023-ம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மேன்மை திட்டத்தின் கீழ் விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்ட தேவைப்படும் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
அதன்படி எண்ணெய் பிழியும் எந்திரங்கள், சிறிய அரிசி அரவை எந்திரங்கள், தானியங்கி தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரங்கள், வாழை நார் பிரித்தெடுக்கும் எந்திரங்கள், சிறிய வகை பருப்பு உடைக்கும் எந்திரங்கள், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் எந்திரங்கள், ஒருங்கிணைந்த மசாலா மற்றும் தானியம் அரைக்கும் எந்திரங்கள், மாவு அரைக்கும் எந்திரங்கள், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரங்கள், நெல் உமி நீக்கும் எந்திரங்கள் மற்றும் இதுபோன்ற ஏனைய எந்திரங்கள் 40 சதவீதம் அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பித்து...
எனவே அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மேன்மை திட்டத்தின் கீழ் விவசாய விளை பொருட்களை மதிப்புக்கூட்ட ஏதுவான எந்திரங்களை அரசு மானியத்தில் பெற உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, துரைக்கண்ணு நகர், சித்தர்காடு, மயிலாடுதுறை அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து மானியத்தில் வாங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.