கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு


கடையில் இருந்த பெண்ணிடம் 4½  பவுன் சங்கிலி பறிப்பு
x

குலசேகரம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

பெட்டி கடை

குலசேகரம் அருகே உள்ள வலியாற்றுமுகம், சரக்கல்விளையைச் சேர்ந்தவர் வேதக்கண். இவரது மனைவி சரசம் (வயது67). இவர் வீட்டின் முன்பக்கத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு 7.15 மணியளவில் சரசம் கடையில் இருந்த போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த நபர் கீழே இறங்கி கடையில் இருந்த சரசத்திடம் சிகரெட் கேட்டுள்ளார். சரசம் சிகரெட் எடுத்துக் கொடுக்க திரும்பினார்.

தங்க சங்கிலி பறிப்பு

உடனே, அந்த நபர் சரசத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதில் சங்கிலி அறுந்து அதில் கிடந்த ½ பவுன் டாலர் கீழே விழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சரசம், 'திருடன்...திருடன்...' என்று கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர்.

இதற்கிடையே மர்ம நபர் கையில் கிடைத்த 4½ பவுன் சங்கிலியுடன் வேகமாக மோட்டார் சைக்கிளில் ஏறி, தனது கூட்டாளியுடன் தப்பி சென்றார். கீழே விழுந்த ½ பவுன் டாலர் சரசத்திடம் கிடைத்தது.

இந்த சம்பவம் குறித்து சரசம் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story