தாவரவியல் பூங்காவில் 40 டன் குப்பைகள் அகற்றம்


தாவரவியல் பூங்காவில் 40 டன் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 May 2023 5:00 AM IST (Updated: 25 May 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

தாவரவியல் பூங்காவில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடந்தது. இந்த கண்காட்சியை ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். இதனால் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானம், நுழைவுவாயில் என பல்வேறு இடங்களில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடந்தது. இந்தநிலையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் 100 பேர் தினமும் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் காலை 7 மணிக்கு பூங்காவுக்கு வருவதற்கு முன்பே தூய்மை பணியாளர்கள் மூலம் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களும் குப்பைகள் அகற்றப்பட்டது. மேலும் நாள் முழுவதும் அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதன்படி, 5 நாட்களில் தாவரவியல் பூங்காவில் சேகரமான 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் குப்பைகள் சேகரமாகும் நிலையில், கோடை சீசன் என்பதால் தற்போது 50 டன் குப்பைகள் சேகரமாகிறது என்றனர்.


Next Story