தேனீக்கள் கொட்டியதில் 40 பெண் தொழிலாளர்கள் காயம்
சாணார்பட்டி அருகே தேனீக்கள் கொட்டியதில் 40 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
40 பெண்கள் காயம்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி ஊராட்சி வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் வரத்து வாய்க்காலை 100 நாள் வேலைத்திட்டத்தில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று காலை வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த 112 பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்கள் கூட்டம் பெண் தொழிலாளர்களை சரமாரியாக கொட்டியது. அவர்கள் 'அய்யோ, அம்மா' என்று அலறி அடித்து கொண்டு ஓடினர். தேனீக்கள் கொட்டியதில் 40 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திற்கு பணி பொறுப்பாளர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே வேம்பார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, செயலர் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக கோபால்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மருத்துவ சிகிச்சை
அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் வயதான பெண்களுக்கு ரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அப்போது சிலர் தங்களை கொட்டிய தேனீக்களை பிடித்து கொண்டு வந்து இருந்தனர். அந்த தேனீக்கள் அதிக விஷமுள்ளதா? என அங்கிருந்த செவிலியர்களிடம் காட்டி அச்சத்தை போக்கி கொண்டனர்.
இதில் கோபால்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 55), மைதிலி (45), முருகாயி (60), தெய்வானை (54), மாரியம்மாள் (65) ஆகிய 5 பேர் தங்களுக்கு தலைசுற்றல் அதிகம் இருப்பதாக டாக்டரிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. உடனே அந்த பெண்களின் உறவினர்கள் கோபால்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.